Friday 19 December 2014

பறையர் புராணம்

தமிழகத்தில் வேளாண்மையை மட்டும் குலத்தொழிலாகக் கொண்டவர்களைத் தான் ஆதிக்குடியினர் எனக் கொள்ளலாம். இவர்கள் உழவுப்பறையரென்றும், நெசவுப் பறையரென்றும் அழைக்கப்பட்டனர். வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டு பிறந்த மண்னை முதன் முதலில் உழுது வந்தவர்களை ஆதிக்குடியினர் அல்லது முதல் குடியினர் எனக் கூறுகிறோம். இவர்கள் மண்னை உழுதுண்டு வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள். இந்த இனங்கள் மண்ணை வாழ்விடமாகக் கொண்டதால்தான் அதை வைத்து உழுது பிழைத்துள்ளார்கள். இவர்களது உழவுத் தொழிலுக்கும் பின்னர்தான் மற்றத் தொழில்கள் பிறந்துள்ளன.
பறையருக்கு தலையாரி, தண்டாசி என்ற பெயர்கள் உண்டு. தலையாரி என்பவன் நிலங்களின் எல்லையை நன்கு அறிந்திருந்தான். இதனால் மற்றச் சாதியினரைப் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகிறான் என்று அறியப்படுகிறது.
பறையர், ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள், பழந்தமிழர், பச்சைத் தமிழர், கலப்பில்லாத தமிழ்க்குடியினர். ஸ்ரீ ராமானுஜரால் திருக்குலத்தார் (புனித குடும்பத்தை சார்ந்தவர்கள்) என்றும், காந்தியடிகளால் ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவாரூர், தியாகராசர் கோயிலோடு தொடர்பு கொண்ட பறையரை யானை ஏறும் பெரும் பறையர் என்று அழைக்கின்றனர்.
உழவுப் பறையர், நெசவுப் பறையர், கோட்டைப் பறையர், கோட்டாகாரர் பறையர், முரசுப் பறையர், அரிப்புக்காரப் பறையர், கோலியப் பறையர், கட்டிப்பறையர், குடிப்பறையர், வேளாப் பறையர், அம்புப் பறையர், வள்ளுவப் பறையர், தீப் பறையர், கொங்குப் பறையர், சோழியப் பறையர், கிழக்கிந்திய பறையர், பந்தல் முட்டிப் பறையர், பூவன் பறையன் என்று பறையரை வகைப்படுத்துவர். இவற்றின் விரிவைக் கீழே காண்போம்.
தமிழ்நாட்டுக் கோயில்களின் திருவிழாக்களில் பறையர்களுக்கு ராஜ மரியாதைகளைப் பெற்று வந்துள்ளனர். பறையர்களில் ஒரு பிரிவினரான கோட்டைப் பறையன் என்பவர்களே. தங்களுக்கென கோட்டையை வைத்திருந்ததை தங்கள் பெயர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்னொரு பிரிவினர் தங்களைக் கோட்டைக்கார பறையர் எனக் கூறிக் கொண்டுள்ளனர். இப்பிரிவினர் குதிரைத் தொழுவங்களை வைத்துக் குதிரைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.
இன்னொரு பிரிவினர் படையில் முரசு கொட்டியதால் முரசு பறையர் என்ற பெயர் பெற்றுள்ளனர். படை நடத்தும்போது இம்மக்கள் வெற்றி முரசு கொட்டுபவர்களாகவும் இருந்துள்ளனர். முரசுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மோசி கீரனாருடைய பாடலிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் அறியலாம்.
தமிழகத்தில் பறையர்கள் பல தொழில்களையும் ஆற்றிவந்துள்ளனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலோர் உழவுப் பறையர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். உழுது பயிரிடுதல் இவர்களுடைய முதன்மைத் தொழிலாக இருந்துள்ளது. இவர்களில் சொத்துள்ளவர்கள் நிலவரி கட்டி வந்துள்ளனர். இந்த இனத்தவர்களில் தலையாரி என்பவர்கள் குளங்களிலிருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணிர் திறந்து விடுபவர்களாகப் பணி புரிந்துள்ளனர். இவர்களில் ஒரு சிலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தறிக்குப் பறைதறி என்று பெயர் இருந்தது. இவர்கள் நெசவுப் பறையர் என அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது செலுத்தப்பட்ட வரிக்கு பறைதறி இறை என வழங்கப்பட்டு வந்துள்ளது.
கி.பி. 1665ம் ஆண்டின் செப்பேடுபடி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த பறையர்கள் தாங்கள் அனுபவித்து வந்த வெள்ளைக் குதிரையைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு வாதாடி வந்துள்ளனர். அத்தோடு தாங்கள் அனுபவித்து வந்த பதினாறுகால் பந்தல், மூன்று தேர்கள், பதினெட்டு வகை இசைக்கருவிகள் போன்றவையும் பயன்படுத்த உரிமை வேண்டினர். இந்த உரிமைகளை அவர்களுக்கு அளிக்க வேண்டாமென அப்பகுதி குரும்பர்கள் எதிர்ப்புக் கிளம்பி வந்தனர். இந்தப் பறையர்கள் மொத்தம் 348 குலங்கள் இருந்தன. இவர்கள் குலங்கள் யாவும் தொழிற் பெயர்களாகவும் இருந்தன.
தங்கம் எடுப்பவர் அரிப்புக்கார பறையர்கள், நெல் விளைவிப்பவர் உழவுப் பறையரென்றும் நெசவு செய்பவர் கோலியப் பறையரென்றும், இரும்பை உருக்குபவர் கட்டிப் பறையரென்றும், முடித்திருத்துவோர் குடிப்பறையரென்றும், துப்புரவு செய்பவர் வேளாப் பறையரென்றும், வேட்டையாடுபவர் அம்புப் பறையரென்றும், முரசு அறிவிப்பவர் முரசுப் பறையரென்றும், நிமித்தம் சொல்லுபவர் வள்ளுவப் பறையரென்றும், கள்ளெடுப்பவர் தீப் பறையரென்றும், வழங்குவதோடு, கொங்குப் பறையர் என்போர் சோழ நாட்டவரென்றும், கிழக்கிந்தியப் பறையர் செலத்தவரென்றும், பந்தல் முட்டிப் பறையர் பானைகளை பந்தல் அளவு உயர்த்தி வைத்துத் திருமணம் செய்தவரென்றும் பெயர் கொண்டிருந்தனர். இவ்வாறு 1891ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி பறையர்கள் என்று 348 பிரிவினரைக் குறிப்பிடுகின்றனர்.
பூவன் பறையன் என்பவன், பாசன வாய்க்கால் ஒன்றை வெட்டிக் கொடுத்து அரையண் அணுகன் என்ற பட்டப் பெயரைப் பெற்றுள்ளான். பூவன் பறையன் என்பவன் சோழ மன்னனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. பூவன் வெட்டித்தந்த வாய்க்காலுக்கு பூவன் வாய்க்கால் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த இனத்தவர்களில் சிலர் சோழர், பாண்டியர்களின் படைகளில் படைவீரர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் வலங்கை மாந்தர் என அழைக்கப்பட்டுள்ளனர். முதலாம் ராசராச சோழன் காலத்தில் இம்மக்கள் அடங்கிய படைக்கு வலங்கை வெள்ளைக்கார சேனை என்று பெயர் இருந்தது. இவர்களது படைத்திறமையைக் கண்டு ஆங்கிலேயர்கள் இவர்களைக் கொண்டு ஒரு தனி ராணுவப் பிரிவை உருவாக்கியுள்ளார்கள் எனத் தெரிகிறது.
கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுக்கல்லில் சாக்கைப் பறையனார் என்ற பெயரும், மற்றொரு நடுக்கல்லில் பறையன் புளியனேன் என்ற பெயரும் காணப்படுகிறது. இந்த வீரர்கள் நாடு காக்கவும், மாடு காக்கவும் வேண்டி தம் புகழ் நிறுத்தி மாய்ந்தனர்.
சங்க இலக்கியத்தில் ஒரு இசைக்குடியாக இடம் பெற்ற பறையர், பிற்காலத்தில் போர் வீரர்களாகவும், காவலர்களாகவும் விளங்கியுள்ளனர். கலைத் தொழிலில் ஈடுபட்ட பறையர்கள் தமிழ்நாட்டுப் புராதன குடிகள். இவர்கள் தமிழ் நாட்டில் பறையரென்றும், வட நாட்டில் மாலமாதிகரென்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் பலமுள்ள கூட்டத்தினராக இருந்தனர். பறையர்களில் பல வகுப்புகள் உண்டு. (ஏற்கெனவே கூறப்பட்டுள்ள பறையர்-பெயர்கள் கீழே வருவதால் ஒரே பெயர் இருமுறை வருவதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இருவேறு ஆசிரியர்களுடைய ஆய்வை அப்படியே கொடுத்துள்ளேன்).
அம்மபறையன், கட்டிப்பறையன், கீழ்க்கட்டி, கோலியாண், கொங்கு, கொறம், கோட்டை, முரசு, மொட்டை, பச்சை, சாம்பன், சங்கு, சோழியன், தங்கலான், வலங்கமத்து, அறுத்துக் கட்டாதவர், வலை நாதன், இவர்களுள் கோலியன் துணி நெய்வோன், வள்ளுவன் பறையர்களுக்குப் புரோகிதன், மருத்துவன், உறுமிக்காரன், பம்பைக்காரன், பறையடிப்பவன், பொடராயன், வண்ணார வேலை செய்பவன்.
பறையர்கள் 9வது நூற்றாண்டின் பல்லவர் காலத்து உயர் பதவியில் இருந்ததாகத் தெரிகிறது.
சோழர் காலத்தில் பறையர் என்ற குலத்தைப் பற்றி இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல செய்திகள் கிடைக்கின்றன. பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கெனத் தனிச் சுடுகாடும் (இன்னும் அதே நிலைதான்) ஒதுக்கப்பட்டிருந்தது. ஏனைய குலத்தினரைப் போலவே அவர்கள் முழு சொத்துரிமை பெற்ற குடிகளாக வாழ்ந்தனர். கிராமத்தார்கள் எழுதிக் கொடுத்த ஆவணங்களில் பறையர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சோழர் காலத்தில் தீண்டாதவர் என்றோ, சண்டாளர்கள் என்றோ இவர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் புல்லுப்பறிக்கிற பறையன் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டான். அத்துடன் புலையரும் சமூகத்தில் தாழ்ந்தவராகக் கொள்ளப்பட்டனர். இந்தக் குலத்தினருள் ஊர்ப்பறையன் மண்டை சோமநாதன் ஏழிசை மோகப் படைச்சண் என்பான் ஒருவரு ராசராசன் காலத்தில் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று ஏற்றிவரத் தானம் அளித்துள்ளான். பறையடியான் ஒருவன் திருக்கழுக்குன்றம் கோயிலில் விளக்கு ஒன்று எரிக்க ஏற்பாடு செய்து வைத்தான். ஆனால் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் திருக்கோவலூர்ப் பகுதியில் பறையர் மிகவும் இழிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
கூலி உழவர்களாகவும் கொத்தடிமைகளாகவும் திகழ்ந்த பறையர்களுள் புல்லுப்பறிக்கும் பறையர் என்னும் புதுப்பிரிவு தோன்றியது. பிற்காலச் சோழப் பேரரசர்கள் படைகளில் உள்ள குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேண்டிய புல்லை வழங்கியவர்கள் புல்லுப் பறிக்கும் பறையர் ஆனர். அரசர்கள் மாறினாலும், அரசுகள் மாறினாலும் புல்லுப்பறிக்கும் அந்தத் தொழிலிலிருந்து மட்டும் அம்மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.
தங்கலான் பறையர் என்ற பிரிவு ஒன்று இருந்தது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பெயர். தங்கலான் பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணத்தில் மணமகளை அழைத்துக் கொண்டு மணமகன் தன் வீட்டுக்கு வரும் சமயம் அவனுடைய மைத்துனன் வாசலில் அவனை நிறுத்தி அவன் கால்விரலில் ஒரு மெட்டியினை அணிவிப்பான். அப்போது தனக்கு ஒரு மகள் பிறந்தால் அவளை, அவன் மகனுக்குக் கட்டி வைப்பதாக மணமகன் உறுதி கூறும்வரை அவன், மணமகன் பாதத்தைக் கிள்ளியபடி இருப்பான்.
தங்கலான் பறையர் சாதி சிறுமியர், முதன் முதல் பூப்படையும்போது நிகழ்த்தும் சடங்கில் அவளுடைய மாமன் மனைவி அல்லது அத்தை, புட்டு முடியப்பட்ட துணியினால் அவளை மொத்தியபடி அவளுக்கு ஒரு பெண் பிறக்குமானால் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைப்பதாக உறுதி கூறும்படி வேண்டுவாள்.
பார்ப்பனர்களின் உட்குழு ஒன்று தன்னை மத்தியானப் பறையர் என அழைத்துக் கொள்கின்றது. ஒவ்வொரு நாளும் நடுப்பகல் ஒரு மணி நேரத்துக்கு இவர்கள் பார்ப்பனத்தன்மையை இழந்து விடுவதாகவும், அந்த ஒரு மணி நேரம் முடிந்த பின்னரே மீண்டும் இவர்கள் பார்ப்பனர்களாக மாறுவதாகவும் ஐதீகம்.
பொதுவாகவே ஐயன் என்னும் சொல் தந்தையைக் குறிக்க பறையர் ஆளும் சொல்லாகும். (ஐயன் என்னும் சொல் பறையரும், ஐயா என்னும் விளிவடிவம் பாண்டி நாட்டு வெள்ளாளர், முதலியார் முதலிய பல குலத்தாரும் தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும்.
பறையருள் தோட்டி என்ற பிரிவினர் உண்டு. இவர்கள் மேளம் அடிப்பவர்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டிகளில் பெரும்பாலோர் மேளம் அடிப்பவரே. இன்றும் இவர்களின் குடும்பம் பெரும் தொகையினராக உள்ளனர்.
கோண்டுச் சமூகத்தில் இசைக்கருவியுடன் பாடும் பர்தான்களைப் பாண என்றழைத்தனர். பாண என்று குறிப்பது சங்க காலத் தமிழ்ச்சமூகத்தில் காணப்பட்ட பாணர்களை நினைவுப்படுத்துகிறது. கோண்டுகளிடம் தோட்டி என்பவரும் அண்டி வாழ்கின்றனர். இன்றைய தமிழ்ச்சமூகத்திலும் தோட்டிகள் உள்ளனர். இத்தகு பிரிவினர் இருப்பது பழம்பெரும் வரலாற்றுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது. கோண்டுகள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள் ஆவர்.
தோட்டி மலை ஒன்று இருந்துள்ளதை அறிகிறோம். கடையேழு வள்ளல்களில் ஒருவன் நள்ளி. இவன் தோட்டி மலையின் தலைவன். இது பழனி மலையின் தென்கீழ்ப் பகுதியில் உள்ளது என்பர். பழனிமலையில் பழையர் என்பவர்கள் வாழ்கின்றனர். இந்த பழையருக்கும் பறையருக்கும் தொடர்பு உண்டு. பறையர்களின் ஒரு பிரிவான தோட்டியின் பெயராலே மேற்கண்ட தோட்டி மலை இருந்ததாகக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment